பிறந்து 45 நாட்களேயான பச்சிளம் குழந்தையை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை!!

467

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலமுருகன் – வெண்ணிலா ஆகிய இருவரும் 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது.

பாலமுருகனுக்கும், வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. மேலும், பாலமுருகன் தனது மனைவிமீது சந்தேகப்பட்டார்.இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு வெண்ணிலா தனது கணவனுடன கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அவரை பாலமுருகன் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டதோடு, ஊருக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதற்கு வெண்ணிலா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், வெண்ணிலாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துள்ளார். இதையடுத்து, மனைவியின் இடுப்பில் இருந்த கைக்குழந்தை பிரதீப்பை பிடுங்கி, ஓங்கி தரையில் அடித்ததில், வாய் மற்றும் தலையிலிருந்து ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

பொலிசார் வழக்குப்பதிவுசெய்து பாலமுருகனை கைதுசெய்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்றம், குழந்தையை அடித்துக் கொலைசெய்த பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.