பெற்றோரை இழந்து தவிக்கும் இளம் பெண்ணுக்கு கலெக்டரின் நெகிழ்ச்சி செயல் : கண்கலங்கிய குடும்பத்தினர்!!

990

தமிழகத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் இளம் பெண்ணுக்கு கலெக்டர் சிறப்பு அனுமதி பெற்று, சத்துணவு அமைப்பாளர் பணிக்கான உத்தரவை அவரது வீட்டில் நேரில் சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் வனிதா. சத்துணவு உதவியாளராக வேலை செய்து வந்த நிலையில், காந்த 2014-ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

இவரது கணவரான வெங்கடேசனும் கடந்த ஓராண்டிற்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக இறந்துவிட்டார். இதனால் இந்த தம்பதியின் மகள்கள், ஆனந்தி, அபி மற்றும் மகன் மோகன் ஆகியோர் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தனர்.

பாட்டியும் சமீபத்தில் இறந்துவிட்டதால், கடந்த 13-ஆம் திகதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து தனது தாயாரின் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று ஆனந்தி மனு அளித்தார்.

பிளஸ்-2 முடித்த ஆனந்தி தற்போது கல்லூரி ஒன்றில் பி.ஏ.படித்து வருகிறார். 19 வயதான ஒருவருக்கு அரசு வேலை வழங்க சட்டத்தில் இடமில்லை என்பதால், சிறப்பு அனுமதி வாங்கி பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

இந்நிலையில் ஆனந்தியின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் உங்களுடைய கஷ்டங்களை அரசுக்கு தெரிவித்து இதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணிசெய்ய உத்தரவினை வழங்க வந்துள்ளேன் என்று மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதனைக் கேட்ட ஆனந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் செய்தவதறியாமல் கண் கலங்கினர். அதனைத் தொடர்ந்து ஆனந்தியின் வீட்டில் சாப்பிட்ட அவர் ஆனந்தியை தொலைதூர கல்வி மையம் மூலம் பி.ஏ., தமிழ் படிக்கவும், இவரது சகோதரி அபி, இரும்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தொடர்ந்து இலவசமாக படிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனந்தியின் தம்பி மோகன் எஸ்.வி.நகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடைய கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கலெக்டரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.