மது பாட்டிலால் மகனை தாக்கிய கணவர்… அடுத்த கணமே மனைவி செய்த பதற வைக்கும் காரியம் : உறைந்து போன கிராமம்!!

544

மயிலாடுதுறை….

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே அமைந்துள்ளது கொற்கை என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். 53 வயதாகும் இவரது மனைவியின் பெயர் அமுதா.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவர் மகாதேவன் வேலைக்கு ஒன்றும் ஒழுங்காக செல்லாமல், எப்போதும் குடித்து விட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், தான் தினந்தோறும் குடிப்பதற்கு, மனைவி அமுதாவிடம் பணம் கேட்டு அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், குடிப்பதற்கு பணம் தர மறுத்த அமுதாவின் கையை மகாதேவன் அடித்து உடைத்திருந்தார்.

இப்படி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு, 500 ரூபாய் வாங்கிக் கொண்ட மகாதேவன், டாஸ்மாக் சென்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, மது பாட்டில்களை வீட்டிற்கு வாங்கி வந்த மகாதேவன், மனைவியுடன் வழக்கம் போல தகராறு செய்ய தொடங்கி உள்ளார்.

மேலும், அமுதாவை மகாதேவன் அடிக்கவும் தொடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களின் மூத்த மகன் அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள் எனக்கூறி தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். மகன் என்றும் பாராமல், போதையில் இருந்த மகாதேவன் பீர் பாட்டிலை உடைத்து, மகனின் உடலை கிழித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இதனைத் தடுக்க வந்த மனைவியையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார் மகாதேவன்.

அந்த வேளையில், கணவரின் கையில் இருந்து அரிவாளை வாங்கிய மனைவி அமுதா, கணவரின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தனது மகனை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறி சரண் அடைந்துள்ளார் அமுதா. தொடர்ந்து, மகாதேவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மது பழக்கத்தின் பெயரில் நடந்த தகராறில், கணவரை மனைவியே கொன்ற சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.