மனைவி இறந்தது கூட தெரியாமல் தோளில் சுமந்தபடி 3 கி.மீ ஓடிய கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

484

மனைவி இறந்தது கூட தெரியாமல்

இந்தியாவின் தலுங்கானா மாநிலத்தில் விஷம் அருந்திய மனைவி இறந்தது தெரியாமல் தோளில் சுமந்தபடி அவரது கணவர் 3 கி.மீ தொலைவு ஓடிய சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள அசீஃபாபாத் மாவட்டத்தில் திங்களன்று இந்த நெஞ்சைப் பிசையும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

35 வயதான ராத்தோட் ராம் என்பவர் விவசாயம் தொழிலாக செய்து வருகிறார். கன மழையால் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த இவர்களின் பருத்தி விவசாயம் முற்றாக அழிந்துள்ளது. இதனால் மனதளவில் இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்களன்று விளை நிலத்தை பார்வையிட சென்ற ராமுடன் அவரது மனைவி புஸ்பலதாவும் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்த பூச்சிமருந்தை எடுத்து புஸ்பலதா அருந்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது விளை நிலத்திலேயே அவர் நினைவிழந்து சரிந்துள்ளார்.

மனைவி விஷம் அருந்தியதை சற்றும் எதிர்பார்க்காத ராம் துரிதமாக செயல்பட்டு, புஸ்பலதாவை தோளில் சுமந்தபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

வாகனம் செல்லும் சாலையில் வந்து சேர ராமுக்கு காட்டாறு ஒன்றை நீந்திக் கடக்க வேண்டியிருந்தது. மட்டுமின்றி அங்கிருந்து 3 கி.மீ தொலைவு கால் நடையாகவும் சென்றுள்ளார். இதனிடையே 3 கி.மீ தொலை கடந்த நிலையில் அவருக்கு ஆட்டோ ஒன்று கிட்டியுள்ளது.

ஆனால் மருத்துவமனையில் சென்று சேர்ந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கெனவே புஸ்பலதா இறதுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷம் அருந்திய மனைவியை தோளில் சுமந்தபடி விவசாயி ராம் ஓடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.