மருந்து வாங்க சொல்லி கொடுத்த ATM கார்டில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு : போண்டா மணியை ஏமாற்றி மோசடி செய்து கைதானவர் யார்?

1245

போண்டாமணி……

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் போண்டாமனி. இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்.

மேலும் நடிகர் போண்டாமணி உடல்நிலை குறித்து சக நடிகர் பெஞ்சமின் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து போண்டாமணிக்கு பலரும் பண உதவி செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடிகர் போண்டாமணிக்கு உதவுவதுபோல் நடித்து ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் ரூ. 1 லட்சம் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் போண்டாமணி மருத்துவமனையில் இருந்தபோது,ராஜேஷ் பிரித்தீவ் நட்பாகப் பழகி அவருக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இதனால் போண்டா மணியின் மனைவி அவரிடம் ஏ.டி.எம் கார்டு கொடுத்து மருந்து வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.

ஆனால் மருந்து வாங்கச் சென்றவர் திரும்பி வரவில்லை. பிறகு சில மணி நேரத்தில் ஏ.டி.எம் கார்டில் இருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜேஷ் பிரித்தீவை கைது செய்தனர். மேலும் ஏ.டி.எம் கார்டில் இருந்து எடுத்த பணத்தில் புதிதாக நகை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும்,திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் மீது கோவை மற்றும் சென்னையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தனது பெயரை மாற்றி பலரையும் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது