
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா எனும் மாற்றுத்திறனாளி இளைஞர் இருக்கிறார். நந்தாவின் உடல் குறைபாட்டை சரிசெய்ய அவரது தாய், கந்தமால் என்ற பகுதியில் உள்ள கோவிலை அணுகியுள்ளார்.
அங்கு, நந்தாவை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டினால் அவரது குறைபாடு குணமடையும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய நந்தாவின் தாய், அவரை அழைத்துக் கொண்டு பலிகுடா எனும் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால், தனக்கு இதில் விருப்பில்லை என நந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், நந்தாவை வலுக்கட்டாயமாக தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, சாமியார் ஒருவர் தீ மூட்டியுள்ளார்.
இதனால் அவர் படுகாயமடைந்தார். அதன் பின்னர், நந்தாவை வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்குமாறு அந்த சாமியார் கூறியுள்ளார். ஆனால் நந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.