ரூ.15 கோடி சொத்துக்காக கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி: சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!

974

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.15 கோடி சொத்துக்காக கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(40), தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துக்களை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்துள்ளார்.

அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த சொத்தினை அடைய ஆசைப்பட்ட ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார்.

இதன்படி, கணவனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். கணவன் மயங்கியவுடன் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை நபர்களை வரவழைத்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, உடலை ஒதுக்குப்புறமான இடத்தில் வீசியுள்ளனர்.

பின்னர், எதுவும் நடக்காதது போல பொலிசில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த குற்றத்திற்காக ஆஷா மற்றும் இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரை கைது செய்து பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.