லாரி வாடகை மட்டும் 2 கோடி : 7 மாத கால பயணத்தில் பெங்களூருவை அடைந்த சிலை!!

1195

பெங்களூருவை அடைந்த சிலை

கோதண்டராமர் சிலை தமிழகத்தில் இருந்து 7 மாத கால பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக நேற்று முன்தினம் பெங்களூருவை அடைந்தது. கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்ட ராமசாமி கோயிலுக்கு, திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து கோதண்டராமரை வழிபட்டனர். அப்போது, கோயிலின் முகப்பில் பிரம்மாண்டமான விஷ்னு சிலை அமைக்கப்பட்டால், நன்றாக இருக்கும் என்று ஆலோசித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கோதண்டராமருக்கு சிலை அமைக்கக் கல் தேடும் பணி தொடங்கியது. ஆனால், இந்தியா முழுவதும் தேடியும் சிலை அமைக்கும் பிரம்மாண்ட கல் தமிழகத்தில் தான் கிடைத்தது.

அதன் பின்னர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் கிடைத்த அந்தக் கல்லில் இருந்து, பிரம்மாண்ட சிலை அமைக்கும் பணி 2014ஆம் ஆண்டு தொடங்கியது. ஆண்டுக்கணக்கில் வடிவமைக்கப்பட்ட அந்த சிலை 64 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்டதாகும்.

அத்துடன் 380 டன் எடையுள்ள அந்த சிலையின் பீடம் 24 அடியில் அமைந்துள்ளது. ஆனால், அந்த சிலையை கொண்டு செல்வது தான் சவாலானதாக இருந்தது. இதற்காக கடந்த நவம்பர் மாதம் 240 சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்ட லொறி கொண்டுவரப்பட்டது. பின்னர், திருவண்ணாமலையில் இருந்து கோதண்டராமர் பெங்களூருவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

வழியில் பல இடர்பாடுகளை சந்தித்தது. சில இடங்களில் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு, அதற்கு நஷ்ட ஈடும் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சிலையின் எடை காரணமாக லொறியின் டயர்கள் அவ்வப்போது வெடித்துவிடும். எனினும் டயர்கள் மாற்றப்பட்டு, சில இடங்களில் தனியாக சாலை அமைக்கப்பட்டு பயணத்தை தொடர வேண்டியது இருந்தது.

ஆனால், நாள் ஒன்றுக்கு 1 அல்லது 2 கிலோ மீற்றர் தொலைவு தான் லொறி செல்லும். இவ்வாறாக சுமார் 7 மாத கால பயணத்தை முடித்த இந்த சிலை, நேற்று முன்தினம் பெங்களூருவை அடைந்தது. சிலையைப் பார்த்த பக்தர்கள் வழிபட்டு பரவசப்பட்டனர். இந்நிலையில், இந்த சிலை கொண்டுவரப்பட்டதற்கான செலவு குறித்த விபரம் தெரிய வந்துள்ளது.

லொறி வாடகை சுமார் 2 கோடி என்றும், டீசலுக்கான செலவு ரூ. 7.5 லட்சம் என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது ஈஜிபுரா பகுதியில் லொறி நிறுத்தப்பட்டுள்ளது. லொறியிலிருந்து சிலை இறக்கப்பட்டதும், இறுதிகட்ட பணிகள் நடைபெறும்.

இதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கோயிலின் முகப்பில் 24 அடி உயரப் பீடத்தில் கோதண்டராமர் சிலை நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.