நடிகை ஸ்ரீப்ரியா
சமூக வலைதளங்களில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என நடிகை ஸ்ரீப்ரியா நெட்டிசன்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், மாற்றுத்திறனாளிகளை மேற்கோளிட்டு அவர் கூறியது பெரும் கண்டனத்திற்குள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‘தாய்மையின் பெருமை அறியாதவர் போலும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள். மாற்றுத்திறமை கொண்டவர்கள், தேசிய விருது பெரும் திறமை கொண்டவர்கள்.
ஒரு சிலரின் வளர்ச்சி போல மாற்றுத்திறனாளிகள் வளர்வதால், மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. அவர்கள் கருணையும் அன்பும் நிறைந்தவர்கள். தயது செய்து தாய்மையையும், சக மனிதர்கள் யாராக இருப்பினும் உங்கள் சொந்த, அறிவற்ற வசைகளுக்கு பயன்படுத்தாது இருப்பின் சிறப்பாக இருக்கும்.
ஒரு பெண்ணை, காலம் சென்ற உங்கள் தலைவர் (ஜெ.ஜெயலலிதா அம்மையார்) தலைவராக, தெய்வமாக போற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நீங்கள், இப்படி பெண்மையையும், அவள் ஈன்றெடுக்கும் பிள்ளையையும் கேவலப்படுத்தும் குணத்தை மாற்றிக் கொண்டால் பெண்களாகவும், அன்னையராகவும் உங்களை மன்னிக்க முயலுவோம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மற்றொரு ட்வீட்டில் அவர் கூறுகையில், ‘சிறு பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘வாங்க’ என்று அழைப்பது என் வழக்கம்… சிலர் குறிப்பாக Twitter போன்றவற்றில் ’வா போ, வாடி போடீ’ என்றெல்லாம் ஒருமையில் குறிப்பிடுவது நாகரீகமற்ற செயல். மாற்றிக்கொண்டால் சிறப்பாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.