வேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்புக்கு நான் காரணமல்ல : கௌசல்யா விளக்கம்!!

942

கௌசல்யா விளக்கம்

வேறொரு பெண்ணின் 6 மாத கருக்கலைப்பு என்பதும், அதற்கு நான் தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்று கௌசல்யா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கோவை ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளரான சக்தி, வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கௌசல்யாவை மறுமணம் செய்ததால் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சக்தி-கௌசல்யா இருவரும் பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், தன் மீது கூறப்பட்ட அவதூறுகளை மறுப்பதாக கௌசல்யா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது கூறப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன்.

மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும், அதற்கு நான் தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

என்னுடைய பிழை என்பது சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது, சில போக்குகள் இருந்திருக்கிறது தெரிந்தே நான் விரும்பியதும் திருமணம் செய்து கொண்டதும் மட்டும்தான்.

இந்த அடிப்படையில் நான் செய்த பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

இவ்விளக்கம் இல்லாமல் அறிக்கையை பகிர்ந்தால் பல அவதூறுகளை ஏற்றுக் கொள்வது போல் ஆகிவிடும் என்பதாலேயே இந்த விளக்கம். இந்த அடிப்படையில் அறிக்கையை வெளியிடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.